பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இப்போதைக்கு குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது.கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து பெட்ரோல், மற்றும் டீசல் மீதான விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்கு குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு புதுடெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை கூறினார்.
எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்து வருவதால் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என கேட்கப்பட்ட போது,எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் நஷ்டம் ஈடு செய்யப்படும் வரை விலை குறைக்கப்படாது என்று அவர் கூறினார்.
எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய சுமையை சுமக்க வேண்டியிருப்பதாலும், அரசு அதிக அளவில் மானியங்களை வழங்கி வருவதாலும், இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முடியாது என்று அவர் கூறினார்.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் குறைக்கப்படும் போது, இது பற்றி சரியான முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment